Wednesday, August 25, 2010

ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !!

சிறு வயது நினைவு என்பது கனவுகள் போன்றது ! சில நினைவுகள் காலம் தாண்டி ஆழ் மனதில் தங்கி விடும்! சில நிகழ்வுகள் யோசிக்க யோசிக்க நினைவில் வரும் ! அந்த வகையில் இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்று நான் நினைத்தவுடன் உருண்டோடி வந்த நினைவுகள் தான் இங்கே பதிவாகின்றது

இந்தப் பதிவிற்கான உந்துதல் என்ன என்பதை பின்னர் சொல்கிறேன்...

மூன்றாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பர்களின் முகம் கூட அவ்வளாவாய் நினைவில் இல்லை ... நான்காம் வகுப்பிலும் , ஐந்தாம் வகுப்பிலும், நாங்கள் 5 பேர் நல்ல நண்பர்களாய் இருந்தது இன்னும் நினைவில் உள்ளது. 5 நண்பர்களில் மூன்று பேர் சிறுமிகள் , இருவர் சிறுவர்.

எங்கள் 3 பேரில் கிருத்திகாவும் ஒருத்தி .. அவளை சிலர் குண்டு கிருத்திகா என்றும் அழைப்பர் ... அவள் அப்பா பாத்திரக் கடை வைத்து இருந்தார். எங்கள் பள்ளியிலேயே கைக் கடிகாரம் அணிந்து வரும் வெகு சிலரில் அவளும் ஒருத்தி ..

அம்மா.. கிருத்திகாக்கு அவ அப்பா பர்த்டேக்கு வாட்ச் வாங்கி குடுத்து இருக்கார் .. பிரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க , அவ பணக்காரி அதானால தான் வாட்ச் எல்லாம் வச்சு இருக்கா அப்டின்னு ... என்கிட்ட இல்லையே ? அப்போ நான் பணக்காரி இல்லையாமா?

இது வெகுளித்தனமாய் என் என் அம்மாவிடம் நான் கேட்டது ...

அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல ... உன் கை ஒல்லி யா இருக்கு இல்லையா. அதனால தான் அம்மா உனக்கு வாங்கி தரல.. அவ குண்டா இருக்கறதால அவ கைக்கு வாட்ச் சரியா இருக்கு ... நீ பெரியவளா ஆனதும் உனக்கும் வாட்ச் சரியா இருக்கும் .. நீ யும் போட்டுக்கலாம்... நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போனா நீ ஆசைப்பட்டது எல்லாம் வாங்கலாம் .. எவ்ளோ வாட்ச் வேணும்னாலும் வாங்கிக்கலாம் என்று என் அம்மா சொன்னது கூட இன்னும் நினைவில் உள்ளது ...

( ஒரு வேளை இன்று எனக்கு கை கடிகாரம் மிகவும் பிடிக்கும் என்பது கூட சிறிய வயதில் வந்த அந்த ஏக்கத்தினால் தானோ ? )
எது எப்படி இருப்பினும் ஒரு முறை கூட கிருத்திகா நான் பணக்காரி என்று தம்பட்டம் அடிக்கும்படியாய் எங்களிடம் பேசியது போன்று நினைவில் இல்லை ..

செந்திலின் பொருளாதாரம் அதற்கு எதிர் மறை. செந்திலின் அப்பா மிதி வண்டி பழுது பார்க்கும் கடை வைத்து இருந்தார்.... அவன் சட்டையில் பொத்தான் இல்லாததால் ஆசிரியை கண்டித்தது இன்னும் நினைவில் உள்ளது ... நட்பிற்காக எதுவும் செய்யுவான் ! திட்டு வாங்கும் விஷயம் என்றால் முதலில் அவனைத்தான் களம் இறக்குவோம் ... ஆசிரியை வெகு ஜோராய் பாடம் நடத்தும் சமயம் " செந்தில் ... கைய தூக்கு " என்றால் உடனே தூக்கி விடுவான் !! "என்ன ? " என்று ஆசிரியை கேட்டால் திரு திரு என்று முழிப்பான் . ஆசிரியையிடம் திட்டு வாங்குவான் ,, வகுப்பு முடிந்ததும் " கைய தூக்கறதுக்கு முன்னாடி எதுக்குன்னு கேக்க மாட்டியா ?? " என்று எங்களிடமும் திட்டு வாங்குவான் ..

மற்றொரு தோழி தர்மாம்பிகை - குல தெய்வத்தின் பெயர் என்று பெற்றோர்கள் வைத்த பெயர் இது. நாங்கள் தர்மா என்று அழைப்போம். ஐந்தாம் வகுப்பு முடிந்தும் தொடர்ந்த எங்கள் நட்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கையில் நெருங்கிய தோழி என்ற அந்தஸ்தை கொடுத்து இருந்தது ... பின்னாளில் அவள் ரிந்தியா என்ற பெயரில் மெகா தொடர் நடிகை ஆகி , பாலச்சந்தரின் இயக்கத்தில் கூட தொலைக்காட்சியில் நடித்தாள். இருவருக்கும் வாழ்க்கைப் பாதை வேறு வேறு ஆகிப் போனதால் தொடர்பு இல்லாமல் போனது ... ஒரு கல்யாண வரவேற்ப்பில் சந்திக்க நேர்ந்த பொழுது ... என்னைப் பார்த்த நொடியில் ஸ்ரீ என்று கூச்சலிட்டு , கட்டிப் பிடித்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினாள் ..

ஐந்து பேரில் இன்னும் நான் சொல்லாத ஒரே நண்பன் நிர்மல் குமார்... எங்களைப் பொருத்தவரை, எங்கள் ஐவரில் அவன் தான் மிகவும் நல்லவன் ... எங்கள் வகுப்பிலேயே அவன் தான் நல்ல பையன் ... எல்லோருக்கும் உதவி செய்பவன் ... நாங்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடியது இன்னும் நினைவில் உள்ளது ... விளையாட்டின் இடையில் களைப்பு தெரியாமல் இருக்க, மிட்டாய் சாப்பிடுவது போன்று ஒரு விளையாட்டும் விளையாடுவோம் ... நிர்மல் நல்ல கருப்பு .. அதனால் அவன் தான் கறுப்பு மிட்டாய் தருவான் .. நான் வெள்ளை மிட்டாய் தருவேன் .. " கருப்பு மிட்டாய் குடு " என்றால் அவன் கன்னத்தைக் குழித்து சிரிப்பான் .. நாங்கள் அந்தக் குழியை கிள்ளி சாப்பிடுவது போன்று பாவனை செய்வோம் .. " வெள்ளை மிட்டாய் குடு " என்றால்
நான் சிரிக்க வேண்டும் ..

நான் கடைசியாய் அவனைப் பார்த்தது ஐந்தாம் வகுப்பு கடைசி தேர்வு முடித்த நாள் .. நான் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை ஆண், பெண் இருவரும் படிக்கும் பள்ளி , ஆறாம் வகுப்பில் இருந்து பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம். கிருத்திகாவும் எங்களோடு அழுதாளா என்பது நினைவில் இல்லை .. ( அதனால் தான் சொன்னேன் இந்த நினைவு ஒரு கனவு போன்று என்று ) மற்ற நான்கு பேரும் அழுதோம் .. செந்திலும் , நிர்மலும் நாங்கள் ஏன் பெண்ணாக பிறக்க வில்லை என்று அழுதார்கள் .. நாங்கள், எல்லோரும் ஏன் ஆணாய்ப் பிறந்து இருக்கக் கூடாது என்று அழுதோம் ..

அந்தப் பருவத்தில் , எங்களுக்கு ஏழை பணக்காரன் , ஆண் , பெண் என்று எந்த பேதமும் இல்லை .. முக்கியமாக ஆண் பெண் பேதம் இல்லை ... .. எங்கள் மிட்டாய் விளையாட்டு போன்று இன்னும் நிறைய விளையாட்டுக்களை நாங்கள் விளையாடி இருக்கின்றோம் .. வெகுளித்தனமாய் பழகினோம் .. குழந்தைகள் குழந்தைகளாக வாழ்ந்தோம்...

இன்றைய குழந்தைகளிடம் இந்த சந்தோஷம் பறிக்கப் படுவது பார்த்து வருத்தப் படுகின்றேன் ..

பி கு : இன்று சிறுவர்களுக்காக தொலைக்காட்சிகளில் போட்டி என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் பெரியவர்களாக மாறி விடும் அவல நிலையைக் கண்டதின் வெளிப்பாடே இந்த பதிவு ...

பெரியவர்களே ! குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் !! நாம் அடைந்த சந்தோஷம் அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கட்டும் !

அன்புடன்
ஸ்ரீ :)

No comments:

Post a Comment