Monday, August 30, 2010

நேற்றிரவு என்ன நடந்தது !!

திடீரென நூறு பிள்ளையார் எறும்பு தொடையில் ஊர்வது போல் ஒரே குறுகுறுப்பு …

பான்ட் பாக்கெட்டில் வைப்ரேடர் மோடில் இருந்த அலைபேசிக்கு உயிர் கொடுத்தேன்.

டேய் மச்சான் எங்கடா இருக்க? எதிர் முனையில் என் அறைத் தோழன் அருண்.

மொட்ட மாடியில

அடுத்த அரை நிமிடத்தில் மடிப்பு கலையாத உடையுடனும் புத்துணர்ச்சியுடனும் அருண் என் எதிரில்

என்ன பேசினாலும் அவன் உரையாடல்களை எப்பொழுதுமே ஒரு கேள்வியுடனே முடிப்பது அருணின் சுபாவம் .

மணி 8.30 ஆச்சே ஆள காணுமேன்னு தான் போன் பண்ணினேன் . நீ இன்னும் மொட்ட மாடியில என்ன பண்ற ? இன்னிக்கு ஆபீஸ் போகலியா ?

போகணும் … கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் … இனிமே தான் கிளம்பனும்

சரி .. நான் வீட்டு சாவிய மறந்து ஆபீசெலையே வச்சுட்டேன் … நான் கிளம்பறேன்.. நீ போகும்போது உன் சாவிய வச்சு பூட்டிக்கோ …. சரியா ?

சரி நீ வாயிலை மட்டும் தாழிட்டு விட்டு கிளம்பு .. நான் பார்த்துக் கொள்கிறேன்

என்ன டா ஆச்சு உனக்கு .. என்ன ஒளர்ற ?

ஊப்ஸ்! கவிதை எழுதிண்டு இருந்தேன் .. அதான் அந்த ஸ்லாங் ல வே பேசிட்டேன் .. .. நீ வாச கதவ மட்டும் தாப்பாள் போட்டுட்டு கிளம்பு.. நான் இதோ வரேன்

சரி … ஓடம்பு எதா சரி இல்லையா? கண்ணெல்லாம் ஏண்டா இப்டி செவந்து இருக்கு ?

இல்லடா சரியான தூக்கம் இல்ல அதான் ….

கொஞ்ச நேரம் முன்ன்டாடி தான் அசந்து தூங்கிட்டேன்னு சொன்ன … இப்போ தூங்கலைன்னு சொல்ற?

பொய் சொல்வதில் இது ஒரு சரமம் .. என்ன சொன்னோம் என்பதை நினைவில் வைத்து இருக்க வேண்டும்

இல்லடா அது ……. டேய்! கார்த்தாலயே கூண்டுல ஏத்தாத … நீ ஆபீஸ் கிளம்பு …

ஆர் யு ஆல்ரைட் ?

ஒன்னும் இல்ல டா ! நீ கிளம்பு …

இயந்திரத்தனமாய் அடுத்த அரை மணியில் கிளம்பி விட்டேன் … வீட்டில் இருந்து 10 நிமிட நடையில் துரைப்பாக்கத்தில் இருக்கும் என் ஆபீஸ் … வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.. மற்றும் ஒரு முறை வானத்தைப் பார்த்தேன் தெளிவான பிரகாசமான வானம் .

இன்று சூரியன் மறையாமலே இருக்கக் கூடாதா ? உலகில் எங்கோ சூரியன் அஸ்தமனமே கிடையாதாமே … அந்த இடத்தில் எதாவது ஒரு ஜீவ ராசியாக நான் பிறந்து இருக்கக் கூடாதா ? எனக்கு காது கேட்காமல் இருக்கக் கூடாதா ? எனக்கு கண் தெரியாமல் போகக் கூடாதா?

என்ன படிக்கும் உங்களுக்கே நான் எதோ உளறுவது போல் தோன்றுகிறதா ? இதற்கே உளறல் என்றால் என் பிரச்சனை என்ன என்று தெரிந்தால் என்ன சொல்வீர்களோ

எனக்கு நட்சத்திரங்களும் நிலவும் பேசுவது தெளிவாக கேட்கின்றது ! என்ன எதோ விவேக் காமெடி நினைவில் வருகிறதா …. நம்புங்கள் .. நேற்றிரவில் இருந்து எனக்கு வானத்து உயிரினங்களின் குரல் கேட்கின்றது.

நேற்று வரை நானும் சாதாரணமான இளைஞன் தான்… நேற்று இரவு அறையில் வெக்கை அதிகமானதால் மொட்டை மாடியில் படுக்கலாம் என்று சென்றேன். அதில் தான் வந்தது வினை …

வானை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டே இருந்த எனக்கு நட்சத்திரங்களும் நிலவும் தர்க்கம் செய்வது கேட்க ஆரம்பித்தது …. நிலவு தன் ஒளியே சிறந்தது என்றும் , நட்சத்திரங்கள் தன் ஒளியே சிறந்தது என்றும் வாதம் செய்து கொண்டு இருந்தார்கள்

முதலில் தொடங்கியது நட்சத்திரங்களின் வாதம் …

ஓர் இடத்தில் இல்லாமல் வானம் முழுவதும் பரவி இருப்பதால் நிலைவிட நாங்களே சிறந்தவர்கள்!

உடனே இடை மறித்தது நிலா

ஓர் இடத்தில் இருது கொண்டே உலகம் முழுவதும் ஓளி கொடுக்கும் நானே உங்கள் அனைவரை விடவும் சிறந்தவன்

நிலாவைப் பற்றி பாடாத கவிஞனே இல்லை .. மானிடர்களைக் பெரிதும் கவர்ந்த நானே சிறந்தவன்

வால் நட்சத்திரம் , துருவ நட்சத்திரம் என்று மானிடர்கள் எங்களைத்தான் புனிதமாக கருதுகிறார்கள் .. எனவே நாங்களே சிறந்தவர்கள்

இப்படியே இரவு முழுவதும் வாதம் வலுத்தது . ஒரு கட்டத்தில் யாரின் ஓளி சிறந்தது என்ற தர்க்கம் வலுப்பெற , மொத்த கவனமும் திடீரென என் பக்கம் திரும்பியது

“மானுடா .. உன் தீர்பிர்க்கான நேரம் வந்து விட்டது.. நீ சொல் நிலவா? நட்சத்திரங்களா? யாரின் ஓளி சிறந்தது ! “ நிலவு திடீரென என் பக்கம் திரும்பி பேசியது

யாரு நானா? நான் சாதாரண மானிடன் .. நான் போய் உங்க வாதத்திற்க்கா… ? அதுவும் தீர்ப்பா ?

“ஆம், வேற்று க்ரஹ வாசியான நீ தான் சரியான தீர்ப்பாளி .. நீ சொல் ” .. இது நட்சத்திரங்களின் பிரதிநிதியின் குரல்

என் சம்மதம் இல்லாமலே நான் நடுவராகிப் போனேன்

எதற்கு வம்பு இருவரின் ஒளியுமே சரி சமமானது என்று சொல்லி தப்பித்து விடுவோம் … மனதிற்குள் நான் யோசித்த தருணத்தில் …

“மானுடா .. மனதில் கொள்! நீதி நெறி தவறி நீ தவறான தீர்ப்பை வழங்கினால் , உன் தலை சுக்கு நூறாய் சிதறி நீ இறந்து போவாய் ” நிலவின் எச்சரிக்கை அசரீரியாய் ஒலித்தது

தைரியத்தை வரவழைத்து பேசத் தொடங்கினேன் … உங்களில் யாரின் ஓளி சிறந்ததென்று தர்மப்படி என்னால் தீர்ப்பளிக்க இயலாது

என்ன சொல்கிறாய் ! நிலவும் நட்சத்திரங்களும் ஒரு சேரக் கேட்டார்கள்

ஆம் .. இந்தப்புறம் இருப்பதோ கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் .. ஆனால் மற்றொரு புறம் ஒற்றை நிலவு .. பிறகு எப்படி உங்கள் இருவரையும் ஒரே தராசில் வைத்து நான் தீர்ப்பு சொல்வது ?

சற்று நேரம் வெறும் மௌனம் மட்டுமே நிலவியது ..

எனக்கு ஒரே சந்தோஷம் … சாமர்த்தியமாக பேசி தப்பித்து விட்டோம் ..

என் சந்தோஷத்தை மொத்தமாய் குலைக்கும் விதமாய் பேசத் தொடங்கியது நட்சத்திரத்தின் பிரதிநிதி

நீ சொல்வதும் சரி தான் மானுடா.. நாங்கள் அனைவரும் ஒன்றாய் திரள்கின்றோம் .. அதன் பின் உன் கண்களுக்கு யாரின் ஓளி சிறந்ததாய்த் தெரிகின்றதோ அதை வைத்து நீ தீர்ப்பு சொல்லலாம்

நட்சத்திரங்கள் அனைத்தும் முதலில் ஒற்றை கோடாய்ச் சேரத் துவங்கியது. ஒரே கோட்டில் ஒன்று சேர்ந்த நட்சத்திரங்கள் அனைத்தும் மொத்தமாய் ஒன்று கூடினால் தெரிந்து விடும் .. யாரின் ஓளி சிறந்தது என்று … இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும் … நானும் பரவசத்துடன் பார்க்கத் தொடங்கினேன்…. திடீரென ஒரே ஓளி மாயம் …. நிலவையும் காண வில்லை .. நட்சத்திரங்களும் காண வில்லை ….. ஒ! விடிந்து விட்டது … சூரியனின் ஒளியில் இருவரும் மறைந்து போனார்கள் .

இரவு நடந்ததை மனதில் அசை போட்ட படியே நடக்கையில் அலுவலகம் வந்து சேர்ந்து இருந்தேன் … வழக்கம் போல் வரவேற்பறையில் களைந்து கிடந்த நாளிதழ்களைப் புரட்டினேன் …. இந்தச் செய்தியைப் படித்தேன்

நேற்று இரவு திடீரென்று வானில் ஒரு ஒளிக் கோடு நகர்ந்து சென்றதைப் பார்த்த மக்கள் வியந்தனர்! இது ஒரு வேளை வேற்று க்ரஹ வாசிகளின் வாகனம் சென்றதாக இருக்குமோ என்று பலர் ஐயம் கொள்கின்றனர் !!

இப்பொழுது என் கவலை எல்லாம் மறைந்தவர்கள் இந்த தர்க்கத்தை மறந்து போவார்களா ? அல்லது மீண்டும் இன்று இரவு பட்டி மன்றம் தொடருமா ??

உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?

அன்புடன்

ஸ்ரீ :)

No comments:

Post a Comment