Monday, August 30, 2010

அபியும் நானும்…

சார் ! வேற எதாவது ஆர்டர் பண்றீங்களா?
இதோடு சர்வர் இதைக் கேட்பது இரண்டாவது முறை.

இல்ல சார்……. அது வந்து …. இன்னிக்கு கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு,
நிறைய பேர் டேபிள் க்காக வெயிட் பண்றாங்க! அதான் …….
அப்புறம் மொதலாளி என்ன திட்டுவார் சார் ….

தயங்கித் தயங்கி வார்த்தைகளை மென்று முழுங்கினான் சர்வர்…

சரி! இன்னொரு காபியே எடுத்துட்டு வாங்க ! நான் வெயிட் பண்றவங்க வந்ததும் 1 ப்ளேட் பஜ்ஜியும் இன்னொரு காபியும் எடுத்துட்டு வாங்க.

சரி சார் ! சொல்லிவிட்டு சர்வர் நகர்ந்தான்

சர்வர் இன்னொரு காபி எடுத்துட்டு வர்றதுக்குள்ள, நான் வெயிட் பண்ற அபி வர்றதுக்குள்ள உங்களுக்கு நான் யார்னு சுருக்கமா சொல்லிடறேன். என் பேர் அர்ஜுன். எங்க அம்மாக்கு நான் ஒரே மகன். நான் பொறக்கறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு விபத்துல ல எங்கப்பா இறந்துட்டாரு. என்ன படிக்க வச்சது வளத்தது எல்லாமே என் மாமா தான். இன்னிக்கு நான் பொறியியல் பட்டதாரி. காக்னிசன்ட் ல வேலை பாக்கறேன்.

நான் என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமா நினைக்கற மூணு பேரு என் அம்மா, என் மாமா அப்புறம் என் அபி. அவளுக்காக தான் இப்போ வெயிட் பண்றேன். இப்போ அபி எனக்கு யாருன்னு நான் சொல்லாமலே கண்டிப்பா உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அபி ஒரு காலேஜ் ஸ்டுடென்ட். MCA படிக்கறா. போன வருஷம் காம்பஸ் செலெக்ஷன் போன போது எதேர்ச்சையா நண்பர்களானோம்! அப்டியே அந்த நட்பு 2 மாசத்துல காதலா மாறிப்போச்சு…

நான் வாழ்கைய ரசிச்சு வாழ ஆரம்பிச்சதே அபிய பாத்த அப்புறம் தான். உண்மைய சொல்றதுன்னா எனக்கு வாழ கத்துக் கொடுத்ததே அபி தான். எப்பவுமே சிர்ரிச்சுக்கிட்டே கலகலப்பா இருக்கற பொண்ணு தான் அபி … அபி வந்தாலே அந்த எடத்துக்கே ஒரு கலகலப்பு வந்துடும் .. அவளோட துருதுருப்ப பார்த்து தான் நான் அவள காதலிக்கவே ஆரம்பிச்சேன்.. சரி சரி .. என் காதல் கதைய இன்னொரு நாள் சொல்றேன் … இப்போ அத விட ஒரு பெரிய பிரச்சன இருக்கு…. அத பத்தி பேசத்தான் அபிக்காக காத்துக்கிட்டு இருக்கேன் ..

ஏய்! ஹலோ !! அர்ஜுன்! நான் வந்து எதிர்க நிக்கறது கூட தெரியாம அப்டி என்ன யோசனை ?

ஹே அபி ! எல்லாம் உன்ன பத்தி தான் !

என்ன பத்தி யா ??

ஆமா .. சரி, அத விடு ! 40 நிமிஷமா உனக்காக வெயிட் பண்றேன் ! இதோட ரெண்டு காபி குடிச்சாச்சு! ஏன் இவ்ளோ லேட்டு ?

சாரி பா .. 1 ஹவர் ஸ்பெஷல் கிளாஸ் அப்டின்னு சொல்லிட்டு SAD சார் 2 மணி நேரம் ரம்பம் போட்டு எங்கள SAD ஆக்கிட்டார்! அதான் லேட்

என்னது SAD சார் ஆ!!

System Analysis and Design !! ஹா ஹா ஹா

இது ஜோக் ஆ ?? இப்போ நான் சிரிக்கணுமா ?

சரி! விடு ! எதோ ட்ரை பண்ணினேன்! என்னப்பா ஆபீஸ் ல ஏதா பிரச்சனையா ??

இல்ல வீட்ல !

வீட்லையா ?

ஆமா! நேத்திக்கு நைட் என் அம்மாவும் , மாமாவும் நான் தூங்கும்போது ஒரு விஷயம் பேசினாங்க. இப்போ நான் வீட்டுக்கு போனதும் அத பத்தி என்கிட்ட பேசுவாங்க.. அதான் அதுக்கு முன்னாடி உன்கிட்ட கலந்து பேசிடலாம்னு தான் வர சொன்னேன்.

நேத்திக்கு நைட் , நீ தூங்கும்போதா ? அப்போ ஒரு கனவ பத்தி பேசவா என்ன இவ்ளோ சீக்கிரம் வர சொன்ன?

அபி ! முக்கியமான விஷயம் பேசணும் ! நம்பள பத்தி பேசணும் ! கொஞ்சம் சீரியஸ் ஆ பேசறியா ! ப்ளீஸ் !!

ஒகே! ஒகே! சீரியஸ் !! சரி சரி மொறைக்காத.. சர்வர் வராரு ! நாம எதோ சண்ட போடறோம்னு நினைச்சுக்க போறாரு ! ரிலாக்ஸ் ! சொல்லு என்ன விஷயம் ?

சொல்றேன் …. உனக்காகதான் பஜ்ஜி ஆர்டர் பண்ணினேன் …. சாப்டு, சொல்றேன் …… நேத்திக்கு நைட் நான் தூங்கிட்டேன்னு நினைச்சுக்கிட்டு என் அம்மாவும் மாமாவும் என் கல்யாணத்த பத்தி பேசிகிட்டு இருந்தாங்க…. பேசினாங்க அப்டின்னு சொல்றத விட, பேச்சு வாக்குலவே கிட்டத்தட்ட எனக்கும் என் மாமா பொன்னு சுதாக்கும் நிச்சயதார்த்தமே முடிஞ்சுரிச்சு!

கண் இமைக்காமல் அபி என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்

இன்னிக்கு சாயங்காலம் நான் வீட்டுக்கு போனதும் இத பத்தி பேசுவாங்க. நானும் இன்னிக்கே என் முடிவ சொல்லிட போறேன்.

முடிவுன்னா? என்ன முடிவு ?

நான் அபி நு ஒரு பொண்ண காதலிக்கறேன் , அவள தான் கல்யாணம் பண்ண போறேங்கற முடிவ.

சொன்னா உன் மாமாவும் அம்மாவும் பேசாம இருந்துடுவாங்களா ? யாரு அந்த பொண்ணு ? என்ன ஏதுன்னு கேட்க மாட்டாங்களா?

நிச்சயமா கேட்பாங்க. மாமா சத்தம் போடுவாரு கோவப்படுவாறு … நாளைக்கு காலைல முதல் வேலையா , ஏன் ஒரு வேளை இன்னிக்கு ராத்ரியே கூட உன் வீட்டுக்கு என் அம்மா பொண்ணு கேட்டு வருவாங்க. அதுனால தான அதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிடுவோம்னு உன்ன அவசரமா வர சொன்னேன்.

அப்போ , ஷாஜஹானா ஆகறதுன்னு முடிவே பண்ணிட்ட? அப்டிதான?

என்ன சொல்ற ?

ஆமா.. ஷாஜஹான் தன் பொண்டாட்டி செத்த அப்புறம் தாஜ்மஹால் கட்டினான்.. நீ என்ன சாகடிச்சுட்டு அப்றமா தாஜ்மஹால் கட்டணும்னு ஆசைப்படற …

அபி! விளையாடாத!

நீ தான் நம்ப வாழ்கயோட விளையாடற! என் அக்காக்கு இப்போ தான் வீட்ல மாப்ள பாத்துட்டு இருக்காங்க. அக்கா கல்யாணம் முடியாம என் கல்யாணத்த பத்தி எப்டி …… ? அர்ஜுன் ! எனக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு பாக்கி இருக்கு. இப்போ நம்ப காதல் விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்… முடிஞ்சுது கத … நாளைலேர்ந்து என்ன காலேஜ் கூட அனுப்ப மாட்டாங்க. ஐயோ நாளைக்கு எனக்கு செமஸ்டர் எக்ஸாம்.. நான் சீக்கிரம் போகணும் …

சரி .. புரியறது … அதுக்காக என்ன என் மாமா பொண்ணு சுதாவ கல்யாணம் பண்ணிக்க சொல்றியா? நான் என்னதான் பண்றது

இப்போதைக்கு இந்த கல்யாண பேச்ச தள்ளி போடு.. ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு தள்ளி போடு .. என் செமஸ்டர் எக்ஸாம் முடியட்டும் … அப்புறம் யோசிச்சுக்கலாம் …. சரியா …

சரி !!

சிறிது நேரத்தில் இருவரும் அவர் அவர் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தோம்

வழியெங்கும் மனதிற்குள் யோசித்த படியே நடக்க ஆர்மபித்தேன் ….

எனக்கு சுதாவ பிடிக்கல, அழகா இல்ல, கருப்பா இருக்கா , குண்டா இருக்கா இப்டி எதாவது சொல்லி .. ச்சே … சுதா நல்ல அழகு! உண்மைய சொல்றதுன்னா அபிய விட சுதா அழகு…. வேற எதாவது ஒத்துக்கற மாதிரி காரணமா யோசிக்கணும் !

எனக்கு கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்ல. நான் ஆன்மீகவாதி ஆகா போறேன்.. சாமியார் ஆகி மக்களுக்கு …….. எதிரில் கண்ணில் நித்யானந்தாவை வசை பாடி அடிக்கப்பட்ட சுவரொட்டி தென்பட அதையும் கைவிட்டேன் ..

இன்னும் 2 மாசத்துல வெளிநாட்டுக்கு வேலை மாத்தல் ஆகும் போல இருக்கு … அதனால் இப்போ கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. அதுக்கப்றம் பாத்துக்கலாம்னு சொல்லிடலாமா …

கடைசி யோசனை என் மனதிற்கு சரி என்று பட்டது .. சொல்லி பாப்போம் .. ரொம்ப ஒத்துக்கலேன்னா… கடைசியில வேற வழி தெரியலேன்னா அபி பத்தி சொல்லிட வேண்டியது தான்.. மனதிற்குள் யோசித்த படியே வீடு வந்து சேர்ந்தேன் …

வீட்டிற்கு வந்த 10 நிமிடத்தில் அம்மா என் அறைக்குள் வந்தார்

அர்ஜுன், காபி கொண்டு வரட்டுமாடா?

மறுபடியும் காபியா ! மனதிற்குள் நினைத்த படியே , இல்ல மா பசி இல்ல எதுவும் வேண்டாம் …

அர்ஜுன்! மாமா உன்கிட்ட முக்கியமா பேசணும்னு சொன்னார்… அம்மா விற்கு பின்னால் மாமா நின்று கொண்டு இருந்தார்

சொ .. சொல்லுங்க மாமா …

இது வரைக்கும் நானும் உங்கமாவும் உன்னையும் சுதாவையும் கலந்து பேசாம எத்தனையோ தடவ இது பத்தி பேசி இருக்கோம்! ஆனா இன்னிக்கு உங்ககிட்ட இத சொல்லியே ஆகணும் ..

(மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் ! சொல்லனுமா ? அப்போ முடிவே பண்ணியாச்சா…. )

சொல்லுங்க மாமா …

அது வந்து !!

மாமா இப்படி பேச முடியாமல் மென்று விழுங்குவது இது தான் நான் பார்க்கும் முதல் முறை

உங்க மனசுல இப்டி வேற எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு …

வேற எண்ணமா .. ஒரு வேளை நம்ப காதல் தெரிஞ்சு போச்சோ ..

சின்னன் சிறுசுங்க … உங்க மனச புரிஞ்சுக்காம .. உறவு விட்டுட கூடாதேன்னு நாங்க பத்தாம் பசலித்தனமாவே யோசிசுட்டோம்

(யாரோ அபி யா பத்தி இவர்கிட்ட சொல்லிட்டாங்க) இல்ல மாமா அது வந்து ….

இல்ல அர்ஜுன் ..பெத்தவங்களுக்கு புள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம் .. உங்க சந்தோஷத்த விட எங்களுக்கு வேற எதுவும் பெருசு இல்ல… உங்க இஷ்டப்படிதான் உங்க கல்யாணம் நடக்கணும்

ரொம்ப தேங்க்ஸ் மாமா … எங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கலேன்னு நீங்க கோவப் படுவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்

என் பொண்ண கல்யாணம் பன்னலேன்னாலும் நீ என் தங்கச்சி மகன் தான்….

தேங்க்ஸ் மாமா … நானே உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிச்சுக்குட்டு இருந்தேன் .. நீங்களே…

நீ ஒன்னும் கவலைப்படாத …. இதோ இப்போ நானும் உன் அம்மாவும் தரகர் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம்.. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வரனா பாத்து முடிச்சுட்டு.. நானே ஒரு நல்ல பொண்ணா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன் ..

(அய்யய்யோ !! நல்ல வேளை ஒளர இருந்தோம்) என்ன மாமா சொல்றீங்க !!!

ஒன்னும் கவலை படாதடா அர்ஜுன் .. உனக்கேத்த பொண்ண இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வர வேண்டியது இந்த மாமாவோட கடமை … சரி … இப்போ கிளம்பினாதான் இருட்டறதுக்குள்ள வர முடியும் .. நாங்க தரகர் வீட்டு வரைக்கும் போயிட்டு வரோம் சரியா…

சொல்லி விட்டு அம்மாவும் மாமாவும் கிளம்பி சென்று விட்டனர்

(என்ன சொல்றார் மாமா …. அபி விஷயம் இவர்களுக்கு தெரியாது போல இருக்கே.. அப்புறம் எப்படி கல்யாணம் நின்னு போச்சு? … ஒன்றுமே புரியலையே… என்ன நடக்குது இங்க.. ) ஒன்றுமே புரியாமால் அவர்கள் சென்ற பாதையையே அர்ஜுன் வெறித்து வெறித்து பார்துக்க் கொண்டிருந்தான் …

எதேர்ச்சையாக அர்ஜுன் வந்த அதே ஹோடேலிர்க்கு சுதாவும் வந்ததோ , அர்ஜுன் அபி சாப்பிட்ட டேபிள் க்கு பின்னால் , சுதா அமர்ந்து இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டதோ , இவனுக்கு முன்னாலேயே வீட்டிற்கு வந்து , ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்ததால் அர்ஜுனை தன் உடன் பிறந்தவனாக பாவிப்பதாக சொல்லி சுதா இந்த கல்யாணத்தை நிறுத்தியதோ பாவம் அர்ஜுனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான் …


அன்புடன்
ஸ்ரீ

No comments:

Post a Comment